Sunday, March 29, 2009

அழகிய பரிசு!





கண்மணி!

‘‘உங்கள் பிறந்தநாளுக்கு
என்ன பரிசு வேண்டும்?’’
என்று கேட்டாய்…

‘‘எனக்கு
ஆண்டவன் கொடுத்த
விலை உயர்ந்த பரிசே
நீதானடி
என் தேவதையே! ’’



அழகு!


அழகுசாதன திரவியங்கள்
எல்லாம் அழகாயின…
அவைகளை
நீ உன் முகத்தில்
தடவியபோது…


இடம்!


கண்மணி!

நகைக்கடையில்
அந்த தங்கமூக்குத்தியைப்
பார்த்தபோது
அது அழகாய் இருந்ததைவிட
அதை வாங்கி
உன் மூக்கில் போட்டு
பார்க்கும்போதுதான்
அது
ரொம்ப அழகாய் இருக்கிறது!




மச்சம்

காலதேவன்
உன் நிலா முகத்தில்
வைத்த திருஷ்டிப்பொட்டு!


ஒரே இனம்!

குழம்பு வைப்பதற்காக
நான் வாங்கி வந்த
உயிர்மீன்களை
நீ அறுத்தபோது
அவைகள் எல்லாம்
உன் கண்களைப் பார்த்து
கேட்டன…
‘‘மீனே இன்னொரு மீனை
கொல்லலாமா…?’’

தாய்… தாரம் …



பத்து மாசம்
சுமந்தவள்
தாய்!

வாழ்க்கை
முழுக்க சுமப்பவள்
தாரம்!




முடியாது!

உன்னைப் பற்றி
கவிதை எழுதச் சொன்னாய்..
எப்படி முடியும்…
கவிதையைப் பற்றி
கவிதை எழுத…!


போட்டி!

கண்மணி!

இரவில் வெளியே வராதே!
நிலா
பொறாமைப்படும்
உன் முகத்தைப் பார்த்து…


நிலா

கடவுள் எனும் கணவன்
வானமனைவியின்
நெற்றியில் வைத்த
குங்குமப்பொட்டு!

காகித தாஜ்மஹால்


நான்
மன்னன் ஷாஜஹான் அல்ல
சலவைக்கற்களால்
தாஜ்மஹால் கட்ட…

நான்
உன் ஏழைக்கணவன்…
நமக்கு
சொந்தமாய்
ஒரு ஓலைக்குடிசைகூட
இல்லைதான்…

ஆனால்…
என்னால்
அதைவிட பெரிய மஹால்
கட்ட முடியும்
சலவைக்கற்களால் அல்ல…
அதைவிட உயர்வான
அன்பினால்!




ஏன்?


உலக அதிசயங்கள்
எதுவும் எனக்கு அழகாய்
தெரியவில்லை…
மனசில் நீ!

தப்பு பண்ணி விட்டாயா…?

அன்பே!
நீ வைத்த
மீன் குழம்பில்
மசாலாவுக்கு பதில்
தேனை
தவறுதலாய்
கலந்து விட்டாயோ…
இனிக்கிறதே!

உயில்




நான்
உயில் எழுதுகிறேன்…
என் சொத்து…
என் அன்பு மனைவி!
என் ஆசைக் குழந்தைகள்!



உன் பதில்

எனக்கு
ஐஸ்வர்யாராய்
தேவ்யானி
சிநேகா
மீரா ஜாஸ்மீன்
பிடிக்கும்
என்றேன்.

நீ
அரவிந்தசாமி
அஜீத்
விஜய்
விக்ரம்
பிடிக்கும்
என்பாய்
என்றுதான்
நினைத்தேன்.

நீ சொன்ன பதில் …
‘‘எனக்கு உங்களை பிடிக்கும்’’
………………
வலித்தது….



சமையல் இரகசியம்!


இனியவளே!
எல்லாரும்தான் சமைக்கிறார்கள்…
ஆனால்…
உன் சமையல் மட்டும்
எப்படி இத்தனை ருசியாய் இருக்கு?
எனக்கோர் சந்தேகம்…
உள்ளங்கையில்
தேனை தடவிக் கொண்டு
சமைக்கிறாயோ…?

குயில் கூட்டம்



இனியவளே!
குயில்கள் முன்னே
பேசாதே!
அவைகள்
உன் குரலைக் கேட்டு
பொறாமைப்படும்…
‘‘இது எந்த நாட்டு
உயர்ஜாதிக்குயில்?’’
என்று…



வெளிநாட்டு வாழ்க்கை


நாங்களும்
தியாகிகள்தான்…
நாட்டிக்காக அல்ல…
வீட்டிற்காக
உறவுகளை எல்லாம் பிரிந்து
உணர்வுகளை கட்டுப்படுத்தி
கல்யாணமாகியும்
சந்நியாசிகளாய்…
பிரம்மச்சாரிகளாய்…
மரக்கட்டைகளாய்…
வாழும்
மனித பொம்மைகள்!

நான் சொல்வதெல்லாம் உண்மை!




இதயம் கவர்ந்தவளே!

உன்னைப் பார்த்து
பிரமித்து
‘அழகி!’
என்றேன்.

‘ஏய்ய்..
பொய் தானே?’
கன்னத்தில்
அதிர்ஷ்டக்குழிவிழ
சிரித்தாய்…

மயில் ஆடும்
என்பது பொய்யா…?

குயில் பாடும்
என்பது பொய்யா…?

மல்லிகை மணக்கும்
என்பது பொய்யா…?

சொல்… சொல்… சொல்…
- இதெல்லாம் பொய் என்றால்
நான் சொன்னதும் பொய்!




காணவில்லை…


அன்பே!

முதன்முதலாய்
உன்னைப் பார்க்கையில்
உன் கைகளைப் பார்த்து
குழம்பிப் போனேன்…

‘‘தேவதைகளுக்கு
சிறகுகள்
இருக்குமாமே!’’

காத்திருக்கிறேன் கண்மணி!




என் உயிரே!

என் மனவானில்
உன்னைப் பார்க்காத நாட்கள்
கறுப்பு அமாவாசைகள்…

உன் முகம் பார்க்கும் நாட்கள்
பிரகாசமான பௌர்ணமிகள்!

உனைப் பிரிந்து…
இந்தப் பாலைவனத்தில்
தினம் தினம்
கும்மிருட்டான
அமாவாசை இரவுகளைப்
பார்த்து …
பெருமூச்சுக்களோடும் …
ஏக்கத்தோடும் …
வேதனைகளோடும்…
விரக்தியோடும்…
… வாழும்
நான்
பௌர்ணமி நிலாவைப் பார்க்க
நெஞ்சு நிறைய கனவுகளோடு
காத்திருக்கிறேன்
கண்மணி!



குழந்தை!

அன்பே!

தாம்பத்யம்
எனும் பத்திரிக்கையில்
நாம் எழுதிய
காதல் கவிதை!

திருமணம்
எனும் ரோஜாச்செடியில்
முளைத்த
ரோஜா மொட்டு!

இளைப்பாறுதல்



வெளிநாடு…

கவலையை மறக்க
குளிரூட்டப்பட்ட மதுக்கடைகள்…

கலர்தோல் அழகிகளின்
ஆட்டம்… பாட்டம்… கொண்டாட்டம்…

எடுப்பான பெண்கள்
இடுப்பை ஆட்டிஆட்டி ஆடும் பெல்லி டான்ஸ்;…
…………… எல்லாம்
உண்டாம்.


நான் கவலைகள் மறக்கும் இடம்
நீ எழுதிய அன்பு மடல்களும்,
என் பர்ஸில்
புன்னகைக்கும்
நம் குழந்தைகளின் போட்டோக்களும்,
உங்கள் நினைவுகளை
அசைபோட்டபடி
பேரீச்சம்பழ மரங்கள் நிறைந்த ப+ங்காக்களில்
தனியே நடக்கும் தருணங்களும்,
அலுவலக களைப்போடு
இரவுகளில் அயர்ந்து தூங்கும்போது
நீயும், குழந்தைகளும்
வரும் இனிய கனவுகளும்!

ஆண்டவனிடம் ஒரு கருணை மனு!



ஆண்டவா!

சின்னவயசில் படித்த
மாயாஜால கதைகளில் வரும்
மந்திரக்கம்பளம்
எனக்கு வேண்டும்!

ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டி
இந்தப் பாலைவனத்தில் வாழும்
நாங்கள்
மந்திரக்கம்பளத்தில் ஏறி
சொந்த நாட்டிற்குச் சென்று
மனைவி, குழந்தைகள்
முகத்தை பார்த்துவிட்டு
விடிவதற்குள்
வந்து விடுகிறோம்…

நாளை காலை
ஆபீஸ் போக வேண்டும்!



புரிதல்

என் பெயர்
அழகு
என்று புரிந்தது…
உன் உதடுகள் உச்சரித்தபோது!



அக்கறைவயல் வரப்பில்

மென்மையான புல்வெளியில்
நீ நடந்தபோது
கவலைப்பட்டேன்…
உன்
மிருதுவான பாதங்களை
புற்கள்
காயப்படுத்தி விடுமோ…?




ரசனை

கண்மணி!
நைல் கட்டரில்
நீ
வெட்டிப்போட்ட
உன்
நகத்தில்
பார்த்தேன்…
பிறைநிலாவை!

மென்மை



அன்பே!
பட்டுப்போன்ற
இலவம் பஞ்சு மெத்தையில்…
அதைவிட
மிகமிக மென்மையான…
நீ!

திருத்தம்



பூ
இலேசானது
என்ற கருத்தை
மாற்றிக் கொண்டேன்…
உன்னைத் தொட்டபோது!

பேரழகு!



உன்னைவிட
அழகானது…
உன் வெட்கம்!

உறவு



அந்த அழகான பெண்
‘அண்ணா’ என்றழைத்தபோது
ஆனந்தமாயிருந்தது!
நினைவில்…
இறந்துபோன தங்கச்சி!

கண்டுபிடித்தேன்!



அன்பே!
உன் சுவாசக்காற்றுதான்
தென்றலோ?

இது ஒரு தொடர்கதை!



கண்மணி!
தனிமையில்
அறைக்குள் இருக்கையில்
உன் ஞாபகம் அதிகம்
வந்தது!

வெளியே வந்து
மொட்டைமாடியில்
நடந்தேன்.

எதேச்சையாய்
நிலாவைப் பார்க்க
மீண்டும்
உன் ஞாபகங்கள்!

ஆண்டவனுக்கு நன்றி!



‘இவ்வுலகம்
மிதமான இன்பம் தருமிடம்.
இவ்வுலக இன்பங்களில் மேலானது
நற்குணமுள்ள
பெண்ணேயாவாள்’
…சொன்னவர்
இறைவனின் தூதர் நபிகள் நாயகம்.

‘ஆஹா…
நான் அதிர்ஷ்டசாலி!’

மாற்றம்


அன்பே!

நீ
பியூட்டி பார்லர்
சென்றாய்...

அழகானது
பியூட்டி பார்லர்!

பயம்



அன்பே!

தயவுசெய்து
தாமரைக்குளத்தில் மட்டும்
குளிக்காதே!

உன் முகத்தைப் பார்த்து
தாமரை என்று
பூக்காரன்
பறித்துக் கொண்டு
போய்விடப் போகிறான்…

காதல்



நான்
காதலிக்கிறேன்…
மனைவியை!

நியாயமா…?



அன்பே!

மல்லிகை கொடியில்

பூக்களைப் பறித்தாய்…
பூக்கள் எல்லாம் கேட்டன :
‘மல்லிகையே
மல்லிகையை பறிக்கலாமா…?

எனக்கு மட்டுமே தெரியும்!




இனியவளே!

உன் வீட்டுத்தோட்டத்தில் வைத்த
பாகற்காய் செடி
காய் காய்த்தபோது
பாகற்காய்கள் எல்லாம் இனித்ததாமே!
…உன் அம்மா ஆச்சரியமாய் சொல்ல…

எனக்கு ஒன்றும் வியப்பே இல்லை.

நீ
குளித்த நீரில்…
வளர்ந்த செடியில்…
ப+த்த காய்கள்
அப்படித்தானே இருக்கும்.

நீ எந்தன் அதிசயம்!



இனியவளே!

அதியசயமானவைகளை
பார்ப்பதற்கு
மியூசியத்திற்கு
சென்றோம்.

அங்கிருந்தவைகள் எல்;லாம்
அதிசயமாய் பார்த்தன…
உன்னை!

எட்டாவது அதிசயம்!



இனியவளே!

நான்
எட்டாவது அதிசயமாய்
மதிப்பது…
உன் தாயின் கருவறை!
அதுதானே
என் தேவதை
குடி இருந்த கோயில்!

வலிக்குமே…!



இனியவளே!

கருப்பு திராட்சைப்பழங்களை
பறித்துச் சாப்பிட
மனசே வருவதில்லை…
உன் அழகிய
கண்களைப் பார்த்தது முதல்!

கணக்கு சரியா?


இனியவளே!

‘உங்களுக்கு
எத்தனை குழந்தைகள்?’
என்று
எதிர் வீட்டில்
புதிதாய் குடிவந்த பெண்
என்னிடம் கேட்டாள்.

நான்
‘மூன்று குழந்தைகள்’
என்று சொன்னபோது
சந்தேகத்தோடு
என்னை
முறைத்தாயே…

‘அடியே… கள்ளி!
உன்னையும் சேர்த்துத்தானடி
சொன்னேன்’

பதவிகளில் உயர்ந்தது!




இனியவளே!

வாழ்க்கையில்
நான் அடைந்த
பதவி உயர்வுகளில்
நான்
உயர்வாய் நினைப்பது…

உன்னால்
எனக்கு கிடைத்த
‘அப்பா!’
என்ற
பதவியைத்தான்!

மாயமோ… மந்திரமோ?



தண்ணீர்
இளநீராய் இனித்தது…
நீ குடித்து வைத்த மிச்சம்!

திருமதி ஒரு வெகுமதி!



முள்ளாய் வளர்ந்த என்னை
முல்லை மலராக்கினாய்!

கல்லாய் கிடந்த என்னை
கற்கண்டாக்கினாய்!

மிருகமாய் இருந்த என்னை
மனிதனாக்கினாய்!

ரசிகனாய் இருந்த என்னை
கவிஞனாக்கினாய்!

தகரமாய் இருந்த என்னை
சிகரமாக்கினாய்!

ஞானசூனியமாய் இருந்த என்னை
ஞானசூரியனாக்கினாய்!

மூங்கிலாய் இருந்த என்னை
புல்லாங்குழலாக்கினாய்!

தண்ணீராய் இருந்த என்னை
பன்னீராக்கினாய்!

புயலாய் இருந்த என்னை
தென்றலாக்கினாய்!

இரும்பாய் இருந்த என் மனதை
கரும்பாக்கினாய்!

பொல்லாதவனாய் இருந்த என்னை
நல்லவனாக்கினாய்!


கிறுக்கனாக இருந்த என்னை
ஞானியாக்கினாய்!

முரடனாய் இருந்த என்னை
குழந்தையாக்கினாய்!

விதையாய் இருந்த என்னை
விருட்சமாக்கினாய்!