Tuesday, May 19, 2009

தாய் மனசு!


பழம்பொருள் சேகரிப்பாளனுக்கு விருது

பார்த்து மகிழ்ந்தாள் அவன் தாய்…

… அனாதை ஆசிரமத்து டி.வி.யில்!கவிஞன் மனசு!


ஆடுகள் அழகாய் இருந்தன…

ரசிக்கத்தான் மனம் இல்லை…

நாளை குர்பானி!

ஆ…


‘உலகத்திலே

தலைசிறந்த நடிகர் சிவாஜிதான்’

மேடையில் பேசிவிட்டு

அமர்ந்தேன்.

மனசாட்சி

நக்கலாய் கேட்டது :

‘உன்னைவிடவா…?’

மனிதர்கள்


‘எந்தத்துண்டு எனக்கு?’

நண்பர்களுக்குள் சண்டை

தட்டில்… சுவையான புறா65!


முடியாது… முடியாது…

கடலின் ஆழத்தில்

புதைந்துபோன

டைட்டானிக் கப்பலை

கண்டுபிடித்தவனால்கூட

கண்டுபிடிக்க முழயாது…

பெண்ணின் மனதில் இருப்பதை!

நிஜங்கள்… நிழல்கள்…


விடுமுறைநாளில்

நண்பன் வீட்டுக்குச்

சென்றேன்.

காதில் ஹெட்போனை

மாட்டிக் கொண்டு

உற்சாகமாய்

சினிமா பாட்டு

கேட்டுக் கொண்டிருந்தான்.

ஆசையாய் பேச வந்த

குழந்தையை

‘சனியனே…

தொந்தரவு பண்ணாதே’

என்றான்.

‘மட நண்பா!

உன் குழந்தையிடம்

குழந்தையாய் பேசிப்பார்!

அதன் பேச்சு

நீ கேட்கும் இசையைவிட

இனிமையானது!’

ஞானோதயம்


வாழ்வின் இலக்கணம்

கற்றுக் கொண்டேன்…

எதிரில் சிலந்திவலை!


அதிசயம்

கர்ப்பம் தரிக்காமல்

குழந்தை பெற்றது…

குப்பைத்தொட்டி!


புரிதல்


ஜாதிக்கலவரம்

சிதறியது…

ஒரே இரத்தம்!

என் கேள்விக்கு என்ன பதில்?


துபாய்.

வியாழன் இரவு.

கையில் மதுப்புட்டியோடும்

வாயில் சிகரெட்டோடும்

ரூம்மேட் தர்க்கம் பண்ணினான் :

‘உலகத்தில்

ஆண்டவன் படைத்த எல்லாம்

நாம் ஜாலியாக இருப்பதற்குத்தான்…

இந்த மதுவும்கூட ஆண்டவன் படைத்ததுதான்!’

நான்

கடைசியாய் கேட்டேன் :

‘விஷத்தையும் ஆண்டவன் படைத்திருக்கிறானே…

அதையும் நீங்கள் பருக வேண்டியதுதானே?’


‘………………’

ஆண்டவன் பார்க்கிறான்!


துபாய் ஏ.சி. பஸ்ஸில்

நான் பயணம் செய்து

கொண்டிருக்கையில்,

பள்ளி அருகில்

புத்தகப்பையோடு

ஏறிய சிறுவனுக்கு

நான் எழுந்து

என் இருக்கையை

கொடுத்தேன்.


அதேநேரம்…

தமிழ்நாட்டில் திருச்சியில்

பஸ்ஸில்

புத்தகப்பையோடு

ஏறிய என் மகனுக்கு

யாரோ ஒருவர்

எழுந்து

தன் இருக்கையை

கொடுத்தார்.

விமர்சனம்


மேடையில்

எனக்கு பாராட்டுவிழா!

‘நல்லவன!;’

‘ஒழுக்கசீலன!;’

‘உத்தமன்’

‘ஏகபத்தினிவிரதன்!’

…. இன்னும் … இன்னும்…

பாராட்டு மழைகள்!

கழுத்தில் மாலையோடும்,

தோளில் சால்வையோடும்

வீட்டிற்கு வந்து

கர்வத்தோடு

கண்ணாடியைப் பார்த்தேன்.

உள்ளே தெரிந்த

என் மனசாட்சி அலறியது :

‘டேய்… வேஷக்காரா!’

பாவமன்னிப்பு


ஆடையில் சேர்ந்த

அழுக்கை

சோப்பு போட்டு

துவைக்க… துவைக்க…

சுத்தமானது ஆடை!

ஆன்மாவில் சேர்ந்த

அழுக்கை அகற்ற

எங்கே

சோப்பு கிடைக்கும்?


குர்ஆன் சொன்னது :

‘இறைவனிடம்

பிரார்த்தியுங்கள்!’

மனம் வருந்தி…

செய்த தவறுகளை

எல்லாம் உணர்ந்து…

மன்னிப்பை

வேண்டி…

ஆண்டவனிடம்

வேண்டுகிறேன்

என் மனதை

சுத்தமாக்க!